தீபஜோதி சன சமூக நிலையம் சுவிஸ்-ஜேர்மனி

பரந்து விரிந்த இந்த பூமிப்பந்தில் உலகின் பல நாடுகளில் எமது தீபஜோதி உறவுகள் பரந்து வாழ்ந்து வருவது யாவரும் அறிந்ததே. அவர்கள் எங்கு வாழ்ந்தாலும் தீபஜோதியின் வளர்ச்சிக்காக உறுதுணையாக நின்று பல்வேறு வழிகளில் உதவி புரிந்து வந்துள்ளனர்.

சுவிட்சர்லாந்து நாட்டில் 1991 ஆம் ஆண்டு புலம்பெயர்ந்த எமது ஊரின் முதல் அங்கத்தவரான திரு. சிவகுரு மனோகரன் அவர்களுடன் தொடங்கப்பட்ட இந்த அத்தியாயம், இன்றும் பல புதிய அங்கத்தவர்களை தன்னகப்படுத்திக் கொண்டே வளர்ந்து வருகின்றது. இருப்பினும், அவர்களை ஒருங்கிணைத்து தீபஜோதியின் வளர்ச்சிக்கு முறையாக பங்களிக்க வேண்டும் என்ற அவா பலரிடமும் நீண்ட காலமாக இருந்து வந்தது.

அந்த எண்ணத்தின் வெளிப்பாடாக, 2016 ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்துக்கு புலம்பெயர்ந்த அங்கத்தவர்களான திரு. வே. நகுலேந்திரன் மற்றும் திரு. சி. லவன் ஆகியோரின் முயற்சியால் 2017 ஆம் ஆண்டு புலனம் குழு வாயிலாக சுவிஸ் நாட்டில் வாழும் தீபஜோதி அங்கத்தவர்கள் ஒன்றிணைக்கப்பட்டனர். எனினும், காலசூழ்நிலைகள் காரணமாக அந்நேரத்தில் அதன் செயற்பாடுகள் விரிவாக முன்னெடுக்கப்படவில்லை.

காலப்போக்கில், சுவிஸ் நாட்டில் தீபஜோதிக்கு ஒரு தனியான கிளை அமைக்கப்பட வேண்டும் என்ற தேவையை உணர்ந்து, 2023 ஆம் ஆண்டு தாயக தீபஜோதி தலைவராக இருந்த திரு. வ. கோபிநாத் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க, சுவிஸ் நாட்டில் வாழ்ந்து வந்த அங்கத்தவர்களான திரு. வே. நகுலேந்திரன், திரு. ஜெ. ஜெனார்த்தன் மற்றும் திரு. ச. பிரதாபன் ஆகியோரின் முயற்சியால் பல அங்கத்தவர்கள் ஒன்றிணைக்கப்பட்டனர்.

அதேவேளை, அண்டை நாடான ஜேர்மனியில் 1984 ஆம் ஆண்டு முதன்முதலில் புலம்பெயர்ந்த அங்கத்தவரான திரு. க. ஜெபநேசன் அவர்களுடன் தொடங்கப்பட்ட அத்தியாயம், இன்றும் சில அங்கத்தவர்கள் குடியேறி வாழ்ந்து வருவதால், அவர்களையும் ஒருங்கிணைத்து செயற்பட முடிவு செய்யப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, 2023 ஆம் ஆண்டு முதன்முறையாக சுவிஸ் மற்றும் ஜேர்மனியில் வாழும் தீபஜோதி அங்கத்தவர்கள் ஒன்றிணைக்கப்பட்டு “தீபஜோதி சுவிஸ் – ஜேர்மன் கிளை” உருவாக்கப்பட்டது. இவ்விரு நாடுகளில் வாழும் அங்கத்தவர்களை உள்ளடக்கி, திரு. சி. மனோகரன் தலைமையில் முதலாவது கிளை நிர்வாகம் அமைக்கப்பட்டது.

23.09.2023 அன்று ஆர்கோ மாநிலத்தில் முதலாவது ஒன்று கூடலும் விளையாட்டுப்போட்டியும் தலைவர் சிவகுரு மனோகரன் அவர்களின் தலைமையில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

தொடர்ந்து, பல்வேறு வழிகளில் தீபஜோதியின் வளர்ச்சிக்கு உதவி புரிந்து வந்த இந்த கிளை, 2024 ஆம் ஆண்டில் தனது அடுத்த கட்ட பரிணாம வளர்ச்சியாக, லூசேர்ன் (Luzern) மாநிலத்தில் சட்டரீதியாக பதிவு செய்யப்பட்டதுடன், 22.06.2024 அன்று சூரிச் (Zürich) மாநிலத்தில் தனது இரண்டாவது ஒன்று கூடலையும், 28.12.2024 அன்று கிறிஸ்துமஸ் விழாவினையும்  வெற்றிகரமாக நடத்தியது.

அதனைத் தொடர்ந்து, 2025 ஆம் ஆண்டில் மூன்றாவது விளையாட்டுப் போட்டி மற்றும் ஒன்று கூடல் நிகழ்வு 21.06.2025 அன்றும், 27.12.2025 அன்று கிறிஸ்துமஸ் விழாவும்  தலைவர் திரு. சந்தியராசா பிரதாபன் தலைமையில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

27.12.2025 அன்று அடுத்த பரிணாம வளர்ச்சியாக எமக்கென ஒரு அதிகாரப்பூர்வ இணையத்தளம் உருவாக்கப்பட்டு, அனைவரின் மத்தியிலும் அறிமுகப்படுத்தப்பட்டது.

theepajothy.com, theepajothy.net, theepajothy.org ஆகிய டொமைன் பெயர்களில் ஆரம்பிக்கப்பட்ட இந்த இணையத்தளம், மற்றும் ஏனைய சமூக வலைத் தளங்கள் மூலம், ஒவ்வொரு அங்கத்தவரின் பங்களிப்புடனும் தீபஜோதியின் கனவுகளை நனவாக்கும் நோக்கில், சுவிஸ் மற்றும் ஜேர்மனியில் வாழும் அங்கத்தவர்களை ஒன்றிணைத்து, பல தசாப்தங்கள் தொடர்ந்து பயணிக்கத் தயாராக நிற்கிறது-

தீபஜோதி சன சமூக நிலையம்

சுவிஸ் - ஜேர்மனி.